search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா - இலங்கை பலப்பரீட்சை
    X

    கட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா - இலங்கை பலப்பரீட்சை

    இந்தியா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை கட்டாக்கில் நடைபெறுகிறது. வெற்றியுடன் தொடரை தொடங்க இந்திய வீரர்கள் ஆர்வமாக உள்ளனர்.
    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    இந்தியா - இலங்கை அணிகள் இடையேயிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே 20 ஓவர் தொடரையும் வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. இதனால் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணியின் கேப்டனான விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்ததால் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இதேபோல 20 ஓவர் தொடரில் இருந்தும் அவர் ஓய்வு கேட்டுள்ளார். இதனால் ஒருநாள் தொடரை போலவே டி20 போட்டிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார்.

    இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கடந்த மாதம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியின்போது சீனியர் வீரரான டோனி விமர்சனத்துக்கு உள்ளானார். இளம் வீரர்களுக்கு அவர் வழிவிட வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.

    இதற்கு டோனி சமீபத்தில் தரம்சாலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுத்தார். டி20 தொடரிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிப்பார். கேப்டன் ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், மணிஷ் பாண்டே, பும்ரா, சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டெஸ்ட், ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி டி20 தொடரிலாவது வென்று ஆறுதல் அடையும் ஆர்வத்தில் உள்ளது. இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிபெற கடுமையாக போராடுவார்கள். டி20 போட்டிக்கான இலங்கை அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடிய 6 வீரர்களே இடம் பெற்றுள்ளனர். அந்த அணி கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய மூன்று போட்டியிலும் தோற்று இருந்தது.



    நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்த்திக் பாண்டியா, மணிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, தீபக் ஹூடா, பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்.



    இலங்கை: திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, மேத்யூஸ், குஷால் பெரேரா, குணதிலகா, டிக்வெல்லா, குணரத்னே, சமரவிக்ரமா, தசுன் ‌ஷனகா, சதுரங்க டிசில்வா, பதினரா, அகிலா தனஞ்செயா, சம்ரா, நுவன் பிரதீப், விஷ்வா பெர்னாண்டோ.
    Next Story
    ×