search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 3 லீக் போட்டியிலும் வென்று அசத்தினார் பி.வி.சிந்து
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 3 லீக் போட்டியிலும் வென்று அசத்தினார் பி.வி.சிந்து

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று தொடரின் மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற பி.வி.சிந்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

    துபாய்:

    உலகின் முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டிகள் துபாயில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நான்காவது நிலையில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான அகனே யமகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார். இருவரும் முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டனர். இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் இரு வீராங்கனைகளும் விளையாடினர்.



    முதல் செட்டில் சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-9 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீராங்கனையிடம் இருந்து ஆட்டத்தை எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சிந்து அந்த செட்டையும் 21-13 என கைப்பற்றினார். இதன்மூலம், சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை வீழ்த்தினார். சிந்து, நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை சென் யூபியை எதிர்கொள்ள இருக்கிறார்.

    இந்த வெற்றியின் மூலம் அனைத்து லீக் போட்டிகளிலும் வென்ற சிந்து 3 புள்ளிகளுடன் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்தார். அடுத்ததாக 8:30 மணிக்கு தொடங்கும் ஆண்கள் பிரிவு லீக் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன வீரர் ஷி யூகியை எதிர்கொள்கிறார். இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்த ஸ்ரீகாந்த் ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×