search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தினார் சிந்து
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தினார் சிந்து

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
    துபாய்:

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் இன்று தொடங்கியது. இந்த போட்டி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில், பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் பி.வி.சிந்து (இந்தியா), சயகா சாட்டோ (ஜப்பான்), அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஹி பிங்ஜியாவ் (சீனா),‘பி’ பிரிவில் தாய் சு யிங் (சீன தைபே), சென் யுபி (சீனா), சுங் ஜி ஹூன் (தென்கொரியா), இன்டனோன் ராட்சனோக் (தாய்லாந்து) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 9-ம் நிலை வீராங்கனை ஹி பிங்ஜியாவை (சீனா) எதிர்கொண்டார்.

    முதல் செட்டில் சிந்து அபாரமாக விளையாடினார். இதனால் அவர் 21-11 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையிடம் இருந்து ஆட்டத்தை கைப்பற்றினார்.

    இதையடுத்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியா போராட்டத்தை வெளிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, 16 - 21 என்ற கணக்கில் சிந்துவிடம் இருந்து இரண்டாவது செட்டை மீட்டார். இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது சுற்று பரபரப்புடன் நடந்தது. சிந்து ஆக்ரோஷமாக விளையாடியதால் மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இறுதி வரை சீன  வீராங்கனை போராடியும் பலனில்லாமல் போனது. இறுதியில், சிந்து 21-11, 16 - 21, 21 - 18 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனை ஹி ஜிங்பியாவை வீழ்த்தினார்.

    இதேபோல், 4-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்ஸ்ல்சென்னுடன் (டென்மார்க்) மோதினார். இதில், விக்டர் ஆக்ஸல்சென்னின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 21-13, 21-17 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
    Next Story
    ×