search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து, சீன வீராங்கனையுடன் மோதல்
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து, சீன வீராங்கனையுடன் மோதல்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மங்கை பி.வி.சிந்து, சீனா வீராங்கனை ஹி பிங்ஜியாவை எதிர்கொள்கிறார்.
    துபாய்:

    முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் பங்கேற்கும் வீரர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் லீ சோங் வெய் (மலேசியா), லாங் அங்குஸ் (ஹாங்காங்), சன் வான் ஹோ (தென்கொரியா), ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் (சீனா) ஆகியோரும், ‘பி’ பிரிவில் ஸ்ரீகாந்த் (இந்தியா), விக்டர் ஆக்ஸ்ல்சென் (டென்மார்க்), ஷி யுஜி (சீனா), ஷோய் டின் சென் (சீன தைபே) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் பி.வி.சிந்து (இந்தியா), சயகா சாட்டோ (ஜப்பான்), அகானே யமாகுச்சி (ஜப்பான்), ஹி பிங்ஜியாவ் (சீனா),‘பி’ பிரிவில் தாய் சு யிங் (சீன தைபே), சென் யுபி (சீனா), சுங் ஜி ஹூன் (தென்கொரியா), இன்டனோன் ராட்சனோக் (தாய்லாந்து) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய மங்கை பி.வி.சிந்து, 9-ம் நிலை வீராங்கனை ஹி பிங்ஜியாவை (சீனா) எதிர்கொள்கிறார். 4-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்ஸ்ல்சென்னுடன் (டென்மார்க்) மோதுகிறார்.
    Next Story
    ×