search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டோனி
    X
    ஆலோசனையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டோனி

    இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?: 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

    இந்தியா-இலங்கை மோதும் 2-வது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
    மொகாலி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

    தர்மசாலா ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆடுகளத்தன்மையை கணித்து செயல்பட தவறி விட்டனர். இலங்கையின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 29 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணி இறுதியில் 112 ரன்னில் சுருண்டது. டோனி (65 ரன்) மட்டும் தாக்குப்பிடிக்காமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

    அந்த கசப்பான அனுபவத்தை மறந்து விட்டு இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர், இலங்கைக்கு பதிலடி கொடுப்பார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அணியில் மாற்றம் ஏதும் இருக்காது என்று தெரிகிறது.

    தர்மசாலாவில் தொடர்ந்து பெய்த மழையால் இலங்கை அணியினர் நேற்று முன்தினம் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. ஒரு நாள் தாமதமாக நேற்று காலை தான் மொகாலி வந்து சேர்ந்தனர். என்றாலும் முதலாவது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்கள். இந்தியாவுடன் டெஸ்ட் தொடரை இழந்த அவர்கள் ஒரு நாள் தொடரை கைப்பற்றி பழிதீர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

    இலங்கை கேப்டன் திசரா பெரேரா நிருபர்களிடம் கூறுகையில், ‘நாளைய ஆட்டத்தில் (இன்று) வெற்றி பெற்றால் தொடர் வசமாகிவிடும் என்பதை அறிவோம். இதற்காக எங்களது 200 சதவீத பங்களிப்பை அளிப்போம். தர்மசாலாவில் செயல்பட்டதை போன்று இங்கும் அசத்தினால் வெற்றி எங்களுக்கு தான். ஆடுகளத்தை பார்ப்பதற்கு பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் போல் தெரிகிறது’ என்றார்.

    தர்மசாலா போன்று மொகாலியில் அதிக குளிர் இருக்காது. ஆனால் முந்தைய நாள் மழை பெய்ததால் ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. இன்றும் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம். இந்திய அணி இங்கு இதுவரை 14 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் அய்யர், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

    இலங்கை: குணதிலகா, தரங்கா, திரிமன்னே அல்லது குசல் பெரேரா, மேத்யூஸ், டிக்வெல்லா, குணரத்னே, திசரா பெரேரா (கேப்டன்), பதிரானா, சுரங்கா லக்மல், அகிலா தனஞ்ஜெயா, நுவான் பிரதீப்.

    பகல் 11.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×