search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன் லீக் அட்டவணை: நாக்அவுட் சுற்றில் பார்சிலோனா - செல்சியா, ரியல் மாட்ரிட் - பி.எஸ்.ஜி
    X

    சாம்பியன் லீக் அட்டவணை: நாக்அவுட் சுற்றில் பார்சிலோனா - செல்சியா, ரியல் மாட்ரிட் - பி.எஸ்.ஜி

    சாம்பியன் லீக் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 16 அணிகளுக்கான நாக்அவுட் சுற்றில் பார்சிலோனா - செல்சியா, ரியல் மாட்ரிட் - பி.எஸ்.ஜி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறந்த கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன் லீக் கால்பந்து தொடர் நடைபெறும். 2017-18 சீசனுக்கான லீக் ஆட்டங்கள் முடிவில் பார்சிலோனா (ஸ்பெயின்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), செல்சியா (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), லிவர்பூல் (இங்கிலாந்து), யுவான்டஸ் (இத்தாலி), டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து), பசேல் (சுவிட்சர்லாந்து), போர்ட்டோ (போர்ச்சுக்கல்), செவியா (ஸ்பெயின்), ஷக்தார் (உக்ரைன்), ரோமா (இத்தாலி), பெயர்ன் முனிச் (ஜெர்மனி), பெசிக்டாஸ் (துருக்கி) ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியன.



    நாக்அவுட் சுற்றில் யார் யாருடன் மோதுவது குறித்து குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதன்முடிவில் நாக்அவுட் சுற்று அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி பார்சிலோனா அணி செல்சியா அணியுடன் பலப்ரீட்சை நடத்த இருக்கின்றன. சாம்பியன் லீக் தொடரில் பார்சிலோனா செல்சியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடியது கிடையாது. 8 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது. இதனால் காலிறுதிக்கு முன்னேற பார்சிலோனாவிற்கு கடும் சவாலாக இருக்கும். முதல் லெக் பிப்ரவரி 20-ந்தேதியும், 2-வது லெக் மார்ச் 14-ந்தேதியும் நடக்கிறது.



    மற்றொரு போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் ரியல் மாட்ரிட், நெய்மர் விளையாடும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் மிகக் கடுமையாக இருக்கும். முதல் லெக் பிப்ரவரி 14-ந்தேதியும், 2-வது லெக் மார்ச் 6-ந்தேதியும் நடக்கிறது.



    மற்ற போட்டிகளில் யுவான்டஸ் (இத்தாலி) - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து), பசேல் (சுவிட்சர்லாந்து) - மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), போர்ட்டோ (போர்ச்சுக்கல்) - லிவர்பூல் (இங்கிலாந்து), செவியா (ஸ்பெயின்) - மான்செஸ்டர் யுனைடெட் (இங்கிலாந்து), ஷக்தார் (உக்ரைன்) - ரோமா (இத்தாலி), பெயர்ன் முனிச் (ஜெர்மனி) - பெசிக்டாஸ் (துருக்கி) பலப்பரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×