search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி கிரிக்கெட்: கர்நாடகா, பெங்கால், விதர்பா, டெல்லி அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    ரஞ்சி டிராபி கிரிக்கெட்: கர்நாடகா, பெங்கால், விதர்பா, டெல்லி அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

    2017-18 சீசன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்கு கர்நாடகா, பெங்கால், விதர்பா மற்றும் டெல்லி அணிகள் முன்னேறியுள்ளன.
    புதுடெல்லி:

    ரஞ்சி டிராபி 2017-18 சீசன் லீக் ஆட்ட முடிவில் மும்பை, கர்நாடகா, பெங்கால், குஜராத், விதர்பா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதி ஆட்டங்கள் கடந்த 7-ந்தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தன. நாக்பூரில் நடைபெற்ற காலிறுதியில் மும்பை - கர்நாடகா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. நேற்று நிறைவடைந்த இப்போட்டியில் கர்நாடகா இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.



    விஜயவாடாவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் டெல்லி - மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசியது. மத்தியப்பிரதேச அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 405 ரன்கள் எடுத்து 67 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மத்தியப்பிரதேசம் 283 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 52-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 51.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் இன்னிங்சில் 107 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 78 ரன்களும் எடுத்த மத்தியப்பிரதேச அணியின் ஹர்பிரித் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



    சூரத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் கேரளா - விதர்பா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கேரளா முதல் இன்னிங்சில் 176 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய விதர்பா 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    அதைத்தொடர்ந்து 577 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் கேரளா களமிறங்கியது. முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் கேரளா அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேரளா அணி இரண்டாவது இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 412 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்கள் வீழ்த்திய விதர்பா அணியின் ராஜ்நீஷ் குர்பானி ஆட்டநாயகன் விருது பெற்றார்.



    ஜெய்ப்பூரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் குஜராத் - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை செய்தன. குஜராத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்கால் முதல் இன்னிங்சில் 354 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குஜராத் அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட்கள் இழப்பிற்கு 695 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து ஆட்டம் டிரா ஆனது. இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற பெங்கால் அரையிறுதிக்கு முன்னேறியது. முதல் இன்னிங்சில் 129 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 114 ரன்களும் எடுத்த பெங்கால் அணியின் அபிமன்யூ ஈஸ்வரன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வருகிற 17-ம் தேதி அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. இதில் டெல்லி - பெங்காலையும், கர்நாடகா - விதர்பாவையும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி 29-ம் தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×