search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொந்த மண்ணில் இந்தியாவின் மோசமான ஸ்கோர்
    X

    சொந்த மண்ணில் இந்தியாவின் மோசமான ஸ்கோர்

    சொந்த மண்ணில் 112 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் 3-வது மோசமான ஸ்கோர் ஆகும். முதலில் பேட் செய்த வகையில் உள்ளூரில் இந்தியாவின் குறைந்த ஸ்கோராக இது பதிவானது.
    தர்மசாலாவில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெறும் 112 ரன்களில் முடங்கியது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் 14-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

    சொந்த மண்ணில் எடுத்துக்கொண்டால், இந்தியாவின் 3-வது மோசமான ஸ்கோராகும். ஏற்கனவே கான்பூரில் இலங்கைக்கு எதிராக (1986-ம் ஆண்டு) 78 ரன்னிலும், ஆமதாபாத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக (1993-ம் ஆண்டு) 100 ரன்களிலும் சுருண்டு இருக்கிறது. இதில் முதலில் பேட் செய்த வகையில் உள்ளூரில் இந்தியாவின் குறைந்த ஸ்கோராகவும் இது பதிவானது.

    இந்த இன்னிங்சில் இலங்கை பவுலர்கள் 13 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாக்கினர். இந்தியாவுக்கு எதிராக அதிக மெய்டன் ஓவர்களை வீசிய அணி என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து (1975-ம் ஆண்டு), நியூசிலாந்து (1981-ம் ஆண்டு) ஆகிய அணிகள் தலா 12 ஓவர்களை மெய்டனாக்கியதே அதிகபட்சமாகும்.

    இந்த ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இது தான் இந்தியாவுக்கு, குறைந்த ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இன்னிங்சாகும். இதற்கு முன்பு 1983-ம் ஆண்டு உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தான் மோசமான நிகழ்வாக இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் கபில்தேவின் (175 ரன்) விசுவரூபத்தால் இந்திய அணி எழுச்சி பெற்று வெற்றி கண்டது நினைவிருக்கலாம்.

    இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் 18 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.


    இந்திய ஒரு நாள் போட்டி வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ‘டக்-அவுட்’ ஆனவர் இவர் தான். இதற்கு முன்பு இந்தியாவின் ஏக்நாத் சோல்கர் 1974-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் ‘டக்-அவுட்’ ஆகி இருந்தார். 
    Next Story
    ×