search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானுடனான 3-வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி
    X

    ஆப்கானிஸ்தானுடனான 3-வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி

    ஆப்கானிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து தொடரை கைப்பற்றியது.
    சார்ஜா:

    அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது. முதல் ஒருநாள் போட்டியில் 138 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் தொடரை கைப்பற்ற போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.



    இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாவித் அகமதி, நூர் அலி சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். சத்ரான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜாவித் அகமதியுடன், ரஹ்மத் ஷா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஜாவித் அகமதி 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அஸ்கார் ஸ்டானிக்சாய் 2 ரன்களிலும், ரஹ்மத் ஷா 44 ரன்களிலும், மொகமது நபி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஆப்கானிஸ்தான் 29 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக பந்துவீசியதால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரன்கள் எடுக்க திணறினர்.

    அதன்பின் களமிறங்கிய ரஷித் கான் மட்டும் சற்று நிலைத்துநின்று ஆடி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரல் 4 விக்கெட்களும், பாரி மெக்கர்தி 3 விக்கெட்களும், பாயித் ரங்கின், டிம் முர்தங், பால் ஸ்டெர்லிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டர்பீல்டும், பால் ஸ்டெர்லிங்கும் களமிறங்கினர். போர்டர்பீல்ட் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டெர்லிங்குடன் ஆண்ட்ரிவ் பால்பிர்னி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். பால்பிர்னி 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஸ்டெர்லிங் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து களமிறங்கிய நியல் ஓ பிரைன் 5 ரன்களிலும், கேரி வில்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டெர்லிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 97 ரன்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அதன்பின் களமிறங்கிய கெவின் ஓ பிரைன், ஸ்டூவர்ட் பாய்ண்டர் ஆகியோர் அயர்லாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அயர்லாந்து அணி 38 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியதோடு, இந்த ஒருநாள் தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான், மொகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், முஜீப் சத்ரான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சிறப்பாக விளையாடி சதம் அடித்து அயர்லாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற ஸ்டெர்லிங் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார். 
    Next Story
    ×