search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி
    X

    இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி

    இலங்கையுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா படுதோல்வி அடைந்தது.
    இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

    8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் சேர்ந்த குல்தீப் யாதவ், ஓரளவிற்கு தாக்குப் பிடித்து ஆடினார். அணியின் ஸ்கோர் 70 ரன்னாக இருக்கும்போது குல்தீப் யாதவ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், டோனி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில் இந்தியா 39.2 ஓவரில் 112 ரன்னில் ஆல் அவுட் ஆனது. டோனி 65 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.



    இலங்கை அணி தரப்பில் லக்மல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டும், பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    அதன்பின், 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். அணி ஸ்கோர் 7 ஆக இருக்கும்போது பும்ரா பந்துவீச்சில் குணதிலகா ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த திரிமன்னே ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 19 ரன்களாக இருந்தது.

    அவரை தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய உபுல் தரங்கா 49 ரன்களில் பாண்ட்யா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 65 ஆக இருந்தது.

    அதன்பின், களமிறங்கிய டிக்வெலா, மேத்யூசுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் 25 ரன்களுடனும், டிக்வெலா 26 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், பும்ரா, பான்ய்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×