search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி காலிறுதி: மும்பையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அசத்தல்
    X

    ரஞ்சி டிராபி காலிறுதி: மும்பையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அசத்தல்

    ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் மும்பையை இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    ரஞ்சி டிராபி 2017-18 சீசன் லீக் ஆட்ட முடிவில் மும்பை, கர்நாடகா, பெங்கால், குஜராத், விதர்பா, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதி ஆட்டங்கள் கடந்த 7-ந்தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகின்றன. நாக்பூரில் நடைபெற்ற காலிறுதியில் மும்பை - கர்நாடகா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. டாஸ் வென்ற கர்நாடகா அணி கேப்டன் வினய் குமார் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி வினய்குமாரின் ஹாட்ரிக் விக்கெட்டில் சிக்கி 173 ரன்னில் சுருண்டது. வினய் குமார் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. சமர்த் (40), அகர்வால் (78), அப்பாஸ் (50), கவுதம் (79), கோபால் (150 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 570 ரன்கள் குவித்தது.

    முதல் இன்னிங்சில் 397 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (14), பிஸ்டா (20), ஹெர்வாத்கர் (20) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 55 ரன்னுடனும், பார்கர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    150 ரன்கள் குவித்த கோபால்

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ், பார்கர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சூர்யகுமார் யாதவ் சதம் அடிக்க, பார்கர் அரைசதம் அடித்தார். மும்பையின் ஸ்கோர் 212 ரன்னாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 108 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். பார்கர் 65 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் வந்த லாட் 31 ரன்களும், துபேய் 71 ரன்கள் எடுத்தாலும் மும்பையின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை. 114.5 ஓவர்கள் விளையாடிய மும்பை அணி 377 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் கர்நாடகா இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×