search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
    X

    உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

    உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    புதுடெல்லி:

    உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
     
    அமெரிக்காவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றுள்ளார்.

    இந்த வெற்றி குறித்து மீராபாய் சானு கூறுகையில், ‘எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. எனது பலவீனங்களை சரிசெய்து, அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்வேன்’ என்றார்.

    உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், விளையாட்டில் சிறந்த மங்கையை மணிப்பூர் வழங்கியுள்ளது. மீராபாய்க்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

    இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிடுகையில், மீராபாயின் வெற்றியை கண்டு நாடே பெருமை கொள்கிறது. உங்களின் எதிர்காலம் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    மேலும், விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரதோர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், விஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் மீராபாய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×