search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல் ஒளிபரப்பு ஒதுக்கீட்டில் ‘அதிகார துஷ்பிரயோகம்’: பி.சி.சி.ஐ.க்கு ரூ.52 கோடி அபராதம்
    X

    ஐ.பி.எல் ஒளிபரப்பு ஒதுக்கீட்டில் ‘அதிகார துஷ்பிரயோகம்’: பி.சி.சி.ஐ.க்கு ரூ.52 கோடி அபராதம்

    ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் ஒதுக்கீட்டில் எத்தேச்சதிகாரமாக செயல்பட்டதாக கூறி சந்தை வர்த்தக போட்டி ஆணையமானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ.52.24 கோடி அபராதம் விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ) நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான விதிமுறைகளில் பி.சி.சி.ஐ எத்தேச்சதிகாரமாக செயல்பட்டதாக சந்தை வர்த்தக போட்டி ஆணையம் கூறியுள்ளது.

    கடந்த பத்து ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டிகளில் பி.சி.சி.ஐ தனது விருப்பத்திற்கேற்ப விதிமுறைகளை மாற்றிக்கொண்டுள்ளது. பி.சி.சி.ஐ லாபம் ஈட்டும் நிறுவனம் இல்லை, அதன் வருமானங்கள் அனைத்தும் கிரிகெட்டின் வளர்ச்சிக்காகவே இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013 முதல் 2016 வரை நடந்த போட்டிகளின் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 1164 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 4.8 சதவிகிதம் அதாவது 52.24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போல 52.24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×