search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறும் 2 ரன்னில் ஆல்-அவுட் ஆன நாகலாந்து பெண்கள் அணி
    X

    வெறும் 2 ரன்னில் ஆல்-அவுட் ஆன நாகலாந்து பெண்கள் அணி

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் மாநிலங்களுக்கு இடையே நடத்தப்பட்ட பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாகலாந்து அணி வெறும் 2 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    குண்டூர்:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் மாநிலங்களுக்கு இடையே 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் குண்டூரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு ஆட்டத்தில் நாகலாந்து- கேரளா அணிகள் (50 ஓவர் ஆட்டம்) மோதின.

    ‘டாஸ்’ ஜெயித்த நாகலாந்து முதலில் பேட்டிங் செய்தது. கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அவர்களுக்கு பந்தை எப்படி விரட்டியடித்து ரன் எடுப்பது என்றே தெரியவில்லை. 17 ஓவர்கள் விளையாடிய நாகலாந்து வெறும் 2 ரன்னுக்கு 10 விக்கெட்டுகளையும் தாரைவார்த்து ஆல்-அவுட் ஆகிவிட்டது. தொடக்க வீராங்கனை மென்கா ஒரு ரன் எடுத்தார். இன்னொரு ரன் ‘வைடு’ வகையில் கிடைத்தது. 9 பேர் டக்-அவுட் ஆனார்கள். பந்து வீசிய 5 கேரளா வீராங்கனைகளில் 4 பேர் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. மொத்தம் 16 ஓவர்களை மெய்டனாக்கினர். இந்த இலக்கை ஒரே பந்தில் கேரளா எடுத்தது. அதாவது எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் கிடைத்தது. அதன் பிறகு கேரளா வீராங்கனை அன்சூ பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

    வடகிழக்கு மாநிலமான நாகலாந்து அணி, இந்த போட்டியில் தற்போது தான் முதல்முறையாக பங்கேற்றுள்ளது. அந்த அணியின் பயிற்சியாளர் ஹோகய்டோ ஜிமோமி கூறும் போது, ‘இது புதியதாக உருவாக்கப்பட்ட அணி. செப்டம்பர் மாதம் தான் பயிற்சியை தொடங்கினோம். அதுவும் மழையால் பாழ்பட்டது. எந்தவித உள்அரங்க விளையாட்டு வசதிகளும் இல்லை. அதனால் போதிய அளவில் பயிற்சி செய்ய முடியாமல் போய் விட்டது’ என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×