search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாக்பூர் டெஸ்ட்: இலங்கை 205 ரன்னில் சுருண்டது; அஸ்வின் 4; இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 3
    X

    நாக்பூர் டெஸ்ட்: இலங்கை 205 ரன்னில் சுருண்டது; அஸ்வின் 4; இசாந்த் சர்மா, ஜடேஜா தலா 3

    நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமரவிக்ரமா 13 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து திரிமன்னே களம் இறங்கினார். கருணரத்னே உடன் இணைந்து திரிமன்னே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் எவ்வளவு பந்தை எதிர்கொள்ள முடியுமோ அவ்வளவு பந்தை எதிர்கொண்டனர். இந்திய பந்து வீச்சாளர்களும் சளைக்காமல் பந்து வீசினார்கள்.

    இலங்கை அணி 25 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது 58 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் திரிமன்னே அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டானார்.



    3-வது விக்கெட்டுக்கு கருணரத்னே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 21 ரன்னுடனும், மேத்யூஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் இருவரும் தொடர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேத்யூஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.


    டிக்வெல்லா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

    4-வது விக்கெட்டுக்கு கருணரத்னே உடன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. கருணரத்னே 51 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 5-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். தேனீர் இடைவேளை வரை இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 47 ரன்னுடனும், டிக்வெல்லா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    அரைசதம் அடித்த சண்டிமல்

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிக்வெல்லா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய சண்டிமல் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.


    அரைசதம் அடித்த கருணரத்னே

    அதன்பின் வந்த ஷனகா 1 ரன்னிலும், பெரேரா 15 ரன்னிலும், ஹெராத் 4 ரன்னிலும், லக்மல் 17 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை அணி 79.1 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.
    Next Story
    ×