search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாக்பூர் டெஸ்ட்: இலங்கை 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள்
    X

    நாக்பூர் டெஸ்ட்: இலங்கை 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள்

    நாக்பூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்துள்ளது.
    நாக்பூர்:

    இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்தியாவின் வெற்றி பறிபோனது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் ஷிகார் தவானுக்கு பதிலாக முரளி விஜய்யும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ரோகித் சர்மாவும் இடம் பெற்றனர். இடுப்பு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி இடம் பெறவில்லை. அவருக்கு பதில் இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அணியே பங்கேற்றது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, அஸ்வின், சகா, ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

    இலங்கை: சண்டிமல் (கேப்டன்), கருணரத்னே, சமர விக்ரமா, திரிமன்னே, மேத்யூஸ், டிக்வெல்லா, ‌ஷனகா, தில்ருவான் பெரேரா, ஹெராத், லக்மல், காமகே.


    கேட்ச் பிடித்த புஜாராவை சக வீரர்கள் பாராட்டும் காட்சி

    டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சண்டிமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமர விக்ரமா, கருணரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடினார்கள். தொடக்க ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்தார். அவரது பந்தை எதிர்கொண்ட சமர விக்ரமா முதல் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 13 ரன் எடுத்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 20 ரன்னாக இருந்தது. அடுத்து திரிமன்னே களம் இறங்கினார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கருணாரத்னே - திரிமன்னே நிதானமாக விளையாடினார்கள். 58 பந்துகளை சந்தித்த திரிமன்னே 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார். ஜடேஜா பந்தில் கருணாரத்னே அவுட் ஆனார். ஆனால், ஜடேஜா அந்த பந்தை நோ-பால் ஆக வீசியதால் கருணாரத்னே அவுட்டில் இருந்து தப்பினார். மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே 21 ரன்னுடனும், மேத்யூஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    மேத்யூசை வீழ்த்தி ஜடேஜாவை பாராட்டும் விராட் கோலி

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. அணியின் ஸ்கோர் 60 ரன்னாக இருக்கும்போது மேத்யூஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கருணாரத்னே உடன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. அவுட்டில் இருந்து தப்பிய கருணாரத்னே அரைசதம் அடித்தார்.

    இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கருணாரத்னே 51 ரன்னுடனும், சண்டிமல் 35 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
    Next Story
    ×