search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுஹாத்தி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுஹாத்தி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி 3-0 என்ற கோல்கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது.
    சென்னை:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுஹாத்தி) அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். சென்னை - கவுகாத்தி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி ஒரு முறையும், கவுகாத்தி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.



    போட்டி தொடங்கிய 11-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியின் ஹக்கு நெடியோடத் சென்னை அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். அதன்பின் 24-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் பாதிநேர ஆட்டத்தில் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் சென்னையின் மொகமது ரபி ஒரு கோல் அடித்தார். கவுஹாத்தி அணியினர் இறுதிவரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதன்மூலம் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நாளை கொச்சியில் நடைபெறும் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணிகள் மோத உள்ளன.
    Next Story
    ×