search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணில் 2-3 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வி கண்டு இருந்தது. முதல் பாதியிலேயே சென்னை அணி அடுத்தடுத்து 3 கோல்களை வாங்கியது. பின் பாதியில் 2 கோல்கள் திருப்பியது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்கள வீரர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. அதனை சென்னை அணி சரிசெய்ய வேண்டியது அவசியமானதாகும்.

    கவுகாத்தி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் கோல் எதுவுமின்றி ஜாம்ஷெட்பூர் அணியுடன் டிரா கண்டது. கவுகாத்தி அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியதுடன், கோல் இலக்கை நோக்கி பந்தை பலமுறை அடித்தாலும் ஒரு கோல் கூட அடிக்காமல் ஏமாற்றம் அளித்தது. பின் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி 10 வீரர்களுடன் விளையாடியதையும் கவுகாத்தி அணி சாதகமாக பயன்படுத்தி கொள்ளவில்லை.



    இன்றைய ஆட்டம் குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி அளித்த பேட்டியில், ‘எங்களது சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். கவுகாத்தி அணி சென்னையில் தோல்வியை சந்தித்தது இல்லை என்று சொல்கிறீர்கள். சாதனைகள் தகர்க்கப்படக்கூடியது தான். அவர்களை இங்கு வீழ்த்தியது இல்லை என்ற நிலைமையை மாற்றி காட்டுவோம்’ என்றார்.

    கவுகாத்தி அணியின் பயிற்சியாளர் ஜோவ் டி டியுஸ் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த லீக் ஆட்டத்தில் கோல் அடிக்க பல வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கினோம். ஆனால் கோல் எதுவும் அடிக்கவில்லை. என்னை பொறுத்தமட்டில் அது பெரிய பிரச்சினை இல்லை. கோல் அடிக்காததால் நான் கவலைப்படவில்லை. லீக் ஆட்டங்கள் முடிவில் நாங்கள் அதிக கோல் அடித்த அணியாக இருப்போம்’ என்றார்.

    சென்னை-கவுகாத்தி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி ஒரு முறையும், கவுகாத்தி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. சென்னை நேரு ஸ்டேடியத்தில் கவுகாத்தி அணி தோல்வியை சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×