search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: நூலிழையில் தப்பியது இலங்கை; 75-7 என்ற நிலையில் ஆட்டம் டிரா ஆனது
    X

    கொல்கத்தா டெஸ்ட்: நூலிழையில் தப்பியது இலங்கை; 75-7 என்ற நிலையில் ஆட்டம் டிரா ஆனது

    புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்து வீச்சில் இருந்து நூலிழையில் இலங்கை அணி தோல்வியை தவிர்த்தது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    முதல் இரண்டு நாட்களின் பெரும்பாலான நேர ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட்டது. 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், காமகே, ஷனகா, தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள்.



    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. திரிமன்னே (51), மேத்யூஸ் (52), ஹெராத் (67) ஆகியோரின் அரைசதங்களால் அந்த அணி முதல் இன்னிங்சில் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி தலா 3 விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா லோகேஷ் ராகுல் (79), தவான் (94), விராட் கோலி (104) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து, 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. கடைசி நாளான இன்று அதிக நேரம் இல்லாததால் விரைவாக அவுட்டாக்கினால் வெற்றி பெற்று விடலாம் என்ற நோக்கத்தில் இந்தியா களம் இறங்கியது.

    அதற்கேற்ப புவனேஸ்வர் குமார் மற்றும் மொகமது ஷமி ஆகியோர் ஆக்ரோஷமாக பந்து வீசினார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் ஓவரில் சமரவிக்ரமா ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது ஓவரில் கருணாரத்னே 1 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

    அடுத்து வந்த திரிமன்னே 7 ரன்னிலும், மேத்யூஸ் 12 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து திணற ஆரம்பித்தது.

    5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சண்டிமல், டிக்வெல்லா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இருந்தாலும் புவனேஸ்குமார் தொடர் தாக்குதல் நடத்தி சண்டிமல் (20), டிக்வெல்லா (27) விக்கெட்டை வீழ்த்தினார்கள். அடுத்து வந்த பெரேராவை ரன்ஏதும் எடுக்க விடாமல் பெவிலியன் திருப்பினார் புவனேஸ்வர் குமார்.



    இலங்கை 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. இன்னும் 3 விக்கெட்டுக்கள்தான் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், வெளிச்சம் குறைய ஆரம்பித்தது. இதனால் 26.3 ஓவருடன் போட்டி நிறுத்தப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னும் 5 அல்லது 6 ஓவர்கள் வீசியிருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும். வெளிச்சமின்மை காரணமாக தோல்வியில் இருந்து இலங்கை அணி நூலிழையில் தப்பித்தது.

    2-வது இன்னிங்சில் புவனேஸ்வர் குமார் 11 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மொகமது ஷமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி புவனேஸ்வர் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாக்பூரில் நடக்கிறது.
    Next Story
    ×