search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது இந்திய வீரர்: 5 நாட்களும் விளையாடிய புஜாரா
    X

    3-வது இந்திய வீரர்: 5 நாட்களும் விளையாடிய புஜாரா

    கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சத்தீஸ்வர் புஜாரா ஐந்து நாட்களும் பேட்டிங் செய்ததால், 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

    நேற்று 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்த புஜாரா இன்று விளையாடினார். இதன்மூலம் இந்த டெஸ்டில் 5 நாட்களும் விளையாடிய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போது புஜாரா 8 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 2-வது நாளில் மழையால் பாதிக்கப்பட்ட போதும் 47 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3-வது நாளிலும் அவர் பேட்டிங் செய்து 52 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் போதும் அவர் 2-வது இன்னிங்சை ஆடி 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இன்றைய 5-வது நாளிலும் ஆடி புஜாரா 22 ரன்னில் ஆட்டம் இழந்தார்.



    டெஸ்டில் 5 நாட்களும் விளையாடிய 3-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இதற்கு முன்பு 1960-ம் ஆண்டு ஜெய்சிம்காவும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கொல்கத்தா), 1984-ம் ஆண்டு ரவி சாஸ்திரியும் (இங்கிலாந்துக்கு எதிராக, கொல்கத்தா) 5 நாட்களும் ஆடி இருந்தனர்.

    இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 3 இந்தியர்களும் 5 நாட்கள் விளையாடியது கொல்கத்தாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச அளவில் 5 நாட்களும் ஆடிய 9-வது வீரர் புஜாரா ஆவார். வெளிநாட்டு வீரர்களில் ஜெப்ரி பாய்காட், ஆலன் லேம்ப், பிளின்டாப் (இங்கிலாந்து), கிம் கியூக்ஸ் (ஆஸ்திரேலியா), அட்ரியன் கிரிபித் (வெஸ்ட்இண்டீஸ்), அல்விரோ பீட்டர்சன் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் டெஸ்டில் 5 நாட்களும் ஆடி உள்ளனர்.
    Next Story
    ×