search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்டிமாலின் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமியை கேப்டன் கோலி பாராட்டுகிறார்.
    X
    சன்டிமாலின் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமியை கேப்டன் கோலி பாராட்டுகிறார்.

    கொல்கத்தா டெஸ்ட்: 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனை

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    கொல்கத்தா :

    இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் மழையால் கணிசமான ஓவர்கள் இழப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் தினேஷ் சன்டிமால் (13 ரன்), விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா (14 ரன்) களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.



    முதல் இன்னிங்சில் இலங்கையின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே சாய்த்தனர். அதாவது முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.

    சொந்த மண்ணில் ஒரு இன்னிங்சில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இது 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும், 1983-ம் ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இத்தகைய சாதனையை படைத்துள்ளனர்.

    மேலும் உள்ளூரில் ஒரே இன்னிங்சில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்தது 2 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்துவது 1986-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
    Next Story
    ×