search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்து பங்கேற்பு
    X

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்து பங்கேற்பு

    சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று இன்று தொடங்குகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
    புஸ்கோவ்:

    சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஸ்கோவ் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    உலக தர வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சாய்னா சமீபத்தில் நடந்த தேசிய போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். அந்த நம்பிக்கையுடன் சாய்னா களம் காண்பார். இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

    இந்த ஆண்டில் 2 சூப்பர் சீரிஸ் மற்றும் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவார். சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் இன்று ஜப்பான் வீராங்கனை சயாகா சாடோவை சந்திக்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தேசிய போட்டியில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய இந்திய வீரர் பிரனாய் தனது முதல் சுற்று ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய தென்கொரியா வீரர் லீ டாங் கென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் வர்மா தனது முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பிரிஸ் லிவெட்டெஸ்சை சந்திக்கிறார். காயம் காரணமாக இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி-சுமித் ரெட்டி, சாத்விக் சாய்ராஜ்-ஷிராஜ் ஷெட்டி ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டியும், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி ஆகியோரும் முதல் சுற்றில் களம் காணுகிறார்கள்.

    அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் சூப்பர் சீரிஸ் இறுதிபோட்டியில் பங்கேற்கும் வகையில் தரவரிசையை அதிகரிக்க இந்த போட்டி உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 
    Next Story
    ×