search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது: வாசிம் அக்ரம்
    X

    பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது: வாசிம் அக்ரம்

    பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடியான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று நீண்ட காலம் ஆகிறது.

    இரு நாடுகள் இடையே நிலவும் அரசியல் பதட்டம் காரணமாக கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

    கடைசியாக 2007-08 ஆண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. ஒருநாள் தொடர் 2012-2013-ம் ஆண்டு நடைபெற்றது. மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு ஒருநாள் தொடர் மட்டும் நடைபெற்று இருக்கிறது.

    அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சம்பந்தமான போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடி வருகிறது. தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதால் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை.

    2015 முதல் 2023 வரை பாகிஸ்தானுடன் 6 தொடர்களில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து இருந்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் பி.சி.சி.ஐ.யால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இந்த நிலையில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பயனற்றதாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் ஐ.சி.சி.யால் எடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் இரு அணிகள் மோதும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு உள்ள தொடர்பு அவசியமானது. அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக பார்க்கக்கூடாது. இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும்.

    ஆசஷ் தொடரை விட இந்தியா-பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். ஆசஷ் தொடரை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை கோடிக்கணக்கான பேர் ரசிப்பார்கள்.

    பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா தயாராக இல்லாத பட்சத்தில் நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    51 வயதான வாசிம் அக்ரம் டெஸ்டில் 414 விக்கெட்டும் (104 போட்டி), ஒருநாள் போட்டியில் 502 விக்கெட்டும் (356 ஆட்டம்) கைப்பற்றி உள்ளார்.
    Next Story
    ×