search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 530 ரன்கள் குவித்து டிக்ளேர்
    X

    ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 530 ரன்கள் குவித்து டிக்ளேர்

    ரஞ்சி கிரிக்கெட் தொடரில் ஒடிசாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    மும்பை:

    இந்த சீசனுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் மும்பை-பரோடா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பரோடா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து இருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பரோடா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 115 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது. ஆதித்யா வாக்மோட் 138 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    கட்டாக்கில் நடைபெறும் தமிழ்நாடு-ஒடிசா (சி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்து இருந்தது. பாபா இந்த்ராஜித் 41 ரன்னுடனும், விஜய் சங்கர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. எம்.விஜய் 140 ரன்னும், விஜய் சங்கர் 100 (183 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாபா அபராஜித் 109 (230 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஒடிசா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது.

    கவுகாத்தியில் நடக்கும் அசாமுக்கு எதிரான (ஏ பிரிவு) ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 349 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய அசாம் அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய அசாம் அணி ஆட்ட நேரம் முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்துள்ளது.

    ராஜ்கோட்டில் நடக்கும் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி தொடக்க நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்து இருந்தது. ஸ்னெல் பட்டேல் 156 ரன்னுடனும், புஜாரா 115 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 161.4 ஓவர்களில் 570 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. ஸ்னெல் பட்டேல் 156 ரன்னிலும் (285 பந்துகளில் 21 பவுண்டரியுடன்), கேப்டன் புஜாரா 182 (313 பந்துகளில் 24 பவுண்டரியுடன்) ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தது.

    பெங்களூருவில் நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 169 ரன்னுடன் களத்தில் நின்றார். நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 172.2 ஓவர்களில் 649 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மயங்க் அகர்வால் 176 ரன்னில் ரன்-அவுட் ஆனார். ஸ்டூவர்ட் பின்னி 118 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி நேற்றைய ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
    Next Story
    ×