search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பையில் கலந்து கொண்ட இந்திய ஜூனியர் கால்பந்து அணி மோடியுடன் சந்திப்பு
    X

    உலகக் கோப்பையில் கலந்து கொண்ட இந்திய ஜூனியர் கால்பந்து அணி மோடியுடன் சந்திப்பு

    ஜூனியர் உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    புதுடெல்லி:

    17-வது ஜூனியர் உலகக்கோப்பை (17 வயதுக்கு உட்பட்டோர்) கால்பந்து போட்டி கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது

    இதற்கிடையே, சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) போட்டிகள் அமைப்பு குழு தலைவர் ஜெமி யார்ஜா கூறுகையில், ‘‘அதிக ரசிகர்கள் நேரில் கண்டு களித்த ஜூனியர் உலக கோப்பை தொடராக இது இருக்கப் போகிறது. இந்த போட்டியை இந்தியா அற்புதமாக நடத்தி இருக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகள் சிறப்பான முறையில் இருந்ததாக அணிகளின் பயிற்சியாளர்களும், வீரர்களும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

    எல்லா ஆடுகளங்களும் ஜூனியர் போட்டி மட்டுமின்றி சீனியர் அளவிலான உலக போட்டியை நடத்தும் அளவுக்கு தரமானதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. வருங்காலங்களில் இந்தியாவை கால்பந்தின் தேசமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அகில இந்திய கால்பந்து சங்கத்துடன் இணைந்து செய்வோம்’’ என பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில், ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய இந்திய அணியினர் இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களிடம் பேசிய மோடி, ‘‘கால்பந்தில் இந்தியா சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. தோல்வியை கண்டு துவள வேண்டாம். ஒருவரது விளையாடும் திறன் அவர்களது தனித்திறமையை வளர்க்க உதவும். மன உறுதியை அதிகரிக்கும்’’ என கூறினார்.

    உலக கோப்பை தொடர் போட்டிகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்திய அணியினர் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் உள்பட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×