search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: டோனிக்கு காம்பீர் ஆதரவு
    X

    விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: டோனிக்கு காம்பீர் ஆதரவு

    டோனிக்கு எங்கு பெருமை சேர்க்க வேண்டுமோ அதை சேர்ப்பது தான் நியாயம் என்றும் பலர் அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோற்றது தொடர்பாக டோனி விமர்சனத்துக்கு உள்ளானார்.

    மிகப்பெரிய இலக்கு இருக்கும் போது அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 20 ஓவர் போட்டியில் இருந்து டோனி விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகார்கர், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.

    முன்னாள் தொடக்க வீரர் ஷேவாக் கூறும்போது, டோனி முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடவேண்டும் என்றார். முன்னாள் கேப்டன் கங்குலி கூறும்போது டோனியின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யலாம் என்றார்.

    இந்த நிலையில் டோனிக்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதுபற்றி கூறியதாவது:-

    டோனிக்கு எங்கு பெருமை சேர்க்க வேண்டுமோ அதை சேர்ப்பது தான் நியாயம். பலர் அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நியாயமற்றது. கிரிக்கெட்டுக்கு அவர் செய்ததை பலர் செய்யவில்லை. குறிப்பாக அணி தோல்வி அடையும் போது அவர் அதனை கையாண்ட விதமே சிறப்பு தான்.

    வெற்றிகளின் போது வி‌ஷயங்களை கையாள்வது எளிது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்தபோது அவர் அமைதியாகவே இருந்தார். அதிக உணர்ச்சி வசப்படவில்லை. எனவே டோனிக்கு இந்த வி‌ஷயத்தில் அதிகமான பெருமையை சேர்க்க வேண்டியது அவசியம்.

    கங்குலி, டிராவிட், ஷேவாக், டோனி ஆகியோரது கேப்டன் பதவியில் நான் விளையாடி உள்ளேன். இதில் டோனியின் கேப்டன் ஷிப்பில் தான் நான் மகிழ்ச்சியாக ஆடியதாக உணர்கிறேன். கேளிக்கைகள், வேடிக்கை இருக்கும். எங்கள் இருவருக்கும் ஒரே வயது தான். அவர் வி‌ஷயங்களை மிகவும் எளிமையாக வைத்துக்கொள்வார். இது அவரது சிறப்பு.



    இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

    இதேபோல அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரியும் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, பொறாமையின் காரணமாகவே டோனி விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு சில நாட்கள் மோசமாக அமைந்து இருக்கலாம். இதனால் முடிந்துவிட்டதாக சிலர் நினைக்கிறார்கள். டோனி தனது எதிர்காலத்தை அவரது முடிவுக்கு ஏற்றவாறே விட வேண்டும்.

    அவரை அணியில் நாங்கள் பெரிதாக கருதுகிறோம். சிறந்த தலைவரான அவர் அணியில் இருப்பது எங்கள் பலம். டோனி ஒரு சூப்பர் ஸ்டார். சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.

    டோனி எப்போதுமே தலைப்பாக இருக்கிறார். ஏனென்றால் அவர் ஒரு சகாப்தம். நீங்கள் புகழ்பெற்று இருக்கும் போதுதான் தொலைக்காட்சியில் தலைப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணி கேப்டன் வீராட்கோலி, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் ஆகியோர் ஏற்கனவே டோனிக்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர். இந்த வரிசையில் காம்பீரும், ரவிசாஸ்திரியும் இணைந்து கொண்டனர்.
    Next Story
    ×