search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் சன்டிமால்
    X

    இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்: இலங்கை கேப்டன் சன்டிமால்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை கேப்டன் சன்டிமால் கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    3 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இலங்கை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பின்னர் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் களம் இறங்கி விளையாடினோம். அங்குள்ள சீதோஷ்ண நிலையில் அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 4 பவுலர்களுடன் விளையாடி வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்திய அணியில் சில மிகச்சிறந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அதனால் 5-வது பவுலர் இடத்திற்கு பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்-ரவுண்டரை சேர்ப்பது குறித்து யோசிக்கிறோம். ஆடுகளத்தை பார்த்த பிறகு அதற்கு ஏற்ப திட்டமிடுவோம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது உலகின் ‘நம்பர் ஒன்’ அணி என்பதை அறிவோம். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். நாங்களும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (2-0) அசத்தினோம். ஒரு அணியாக நன்றாக செயல்பட்டோம். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள எங்களது வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த கால போட்டிகளின் முடிவை திரும்பி பார்க்க விரும்பவில்லை. இந்த தொடருக்கு எங்களை நன்கு ஆயத்தப்படுத்தி வருகிறோம். வீரர்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.



    இந்திய மண்ணில் நாங்கள் ஒரு போதும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. இங்கு டெஸ்டில் வாகை சூடுவது ஒவ்வொரு வீரர்களின் கனவாகும். கொல்கத்தாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடுவது இதுவே முதல் முறையாகும். கொல்கத்தாவில் ரசிகர்கள் கூட்டத்தின் முன்னிலையில் ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவமாக அமையும். ஒரு அணியாக தொடரை சிறப்பாக தொடங்குவது முக்கியமானதாகும்.

    இந்தியாவில் எனது முதல் டெஸ்ட் சுற்றுப்பயணம் இதுதான். மேத்யூஸ், ஹெராத் தவிர எங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் இந்தியாவில் இது தான் முதல் டெஸ்ட் தொடராகும். உண்மையிலேயே இது ஒவ்வொருவருக்கும் நல்ல சவாலாக இருக்கும்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் தாக்குதலை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். இருவரும் உலகின் டாப்-2 பவுலர்களாக விளங்குகிறார்கள். சில ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சில் இருவரும் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களை எதிர்கொள்ள எத்தகைய திட்டம் வகுத்துள்ளோம் என்பதை உங்களிடம் சொல்ல முடியாது. அவர்களுக்கு எதிராக சில ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் களத்தில் பார்க்கலாம்.

    இவ்வாறு சன்டிமால் கூறினார்.
    Next Story
    ×