search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் தொடரை முதல் முறையாக வென்றது: பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு
    X

    20 ஓவர் தொடரை முதல் முறையாக வென்றது: பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று முதல்முறையாக தொடரை கைப்பற்றியதால், பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது.

    திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது மற்றும் கடைசி போட்டி மழையால் தாமதம் ஆனது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 8 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்தது. மணீஷ் பாண்டே 11 பந்தில் 17 ரன் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். சவுத்தி, சோதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 8 ஓவர் களில் 6 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 6 ரன்னில் வெற்றி பெற்றது. கிராண்ட்ஹோம் 10 பந்தில் 17 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தார். பும்ரா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். சஹால் விக்கெட் எடுக்காவிட்டாலும் 2 ஓவர் வீசி 8 ரன்களே கொடுத்தார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றியது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 40 ரன்னில் வெற்றி பெற்றது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. நியூசிலாந்து அணி இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடரையும், 20 ஒவர் தொடரையும் இழந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-



    இந்த ஆடுகளத்தில் இந்த சூழ்நிலையில் 68 ரன் இலக்கு என்பது சவாலானதே. நாங்கள் நல்ல ஸ்கோரை எடுத்ததாக கருதுகிறோம். மணீஷ் பாண்டேயின் ‘பேட்டிங்’ சிறப்பாக இருந்தது. 68 ரன் இலக்கு நியூசிலாந்துக்கு சவாலானதே என்பதை நான் அறிந்து இருந்தேன். எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. திட்டமிட்டதை நன்றாக செயல்படுத்தினர்.

    கடைசி ஓவரை பாண்டியா மீது நம்பிக்கை வைத்துதான் கொடுத்தேன். அவரும் நேர்த்தியாக வீசினார். பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு எல்லாம் சேரும்.

    மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் தாமதமாக தொடங்கியது. அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருந்து ஆட்டத்தை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ரசிகர்களை பாராட்டுகிறேன்.

    திருவனந்தபுரம் ஸ்டேடியம் உலக தரம் வாய்ந்தாக இருந்தது. மைதான ஊழியர்களின் கடுமையான பணி மகத்தானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “68 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் சவாலானதே. பேட்டிங் செய்வதில் சிரமம் இருந்தது. ஆனால் எங்களது வீரர்கள் கடைசி வரை போராடியதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    இந்தியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருந்தது. நாங்கள் தொடரை இழந்தாலும் இந்திய சுற்றுப் பயணம் சிறப்பாகவே இருந்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் சொந்த மண்ணில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
    Next Story
    ×