search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: பாட்னா ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா? குஜராத் அணியுடன் சென்னையில் இன்று பலப்பரீட்சை
    X

    புரோ கபடி லீக்: பாட்னா ‘ஹாட்ரிக்’ பட்டம் வெல்லுமா? குஜராத் அணியுடன் சென்னையில் இன்று பலப்பரீட்சை

    புரோ கபடி லீக்கில் சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரட்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் கடந்த ஜூலை 28-ந் தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் நடந்த இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய 6 அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய வரவான தமிழ் தலைவாஸ் உள்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

    3 மாத காலம் நடைபெற்ற இந்த கபடி கொண்டாட்டம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாசெல் அட்ராசாலி தலைமையிலான அறிமுக அணியான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 22 லீக் ஆட்டங்களில் 15 வெற்றி, 4 தோல்வி, 3 டிராவுடன் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக அடியெடுத்து வைத்தது.

    பர்தீப் நர்வால் தலைமையிலான பாட்னா பைரட்ஸ் அணி 22 லீக் ஆட்டங்களில் 10 வெற்றி, 7 தோல்வி, 5 டிராவுடன் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ‘பிளே-ஆப்’ சுற்றில் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ் அணிகளை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 2 முறையும், பாட்னா அணி ஒரு முறையும் வெற்றி பெற்றன.

    கடந்த 2 சீசனிலும் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற பாட்னா பைரட்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். அந்த அணியின் பிரதான பலமே கேப்டன் பர்தீப் நர்வால் தான். அவர் ரைடு மூலம் இதுவரை 350 புள்ளிகள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். மொனு கோட் ரைடிலும், ஜெய்தீப் கேட்ச் செய்வதிலும் கில்லாடிகளாக திகழ்கிறார்கள்.

    குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியில், சச்சின் ரைடு செல்வதில் மிரட்டக்கூடியவர். கேப்டன் பாசெல் அட்ராசாலி, அபோசர் மொகாஜெர், சுனில்குமார் ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். முதல் பட்டத்தை ருசிக்க குஜராத் அணி தீவிரம் காட்டும். இரு அணியிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    பாட்னா கேப்டன் பர்தீப் நர்வால் (வலது), குஜராத் கேப்டன் பாசெல் அட்ராசாலி ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி

    இறுதிப்போட்டி குறித்து பாட்னா அணியின் பயிற்சியாளர் ராம்மெகர் சிங் கூறுகையில் ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். பர்தீப் நர்வால் நல்ல பார்மில் உள்ளார். அவர் தனது 50 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே எங்கள் அணி பட்டத்தை வென்று விடும். எங்கள் அணியினர் ரைடில் சிறப்பாக செயல்படுவதால் தடுப்பு ஆட்டக்காரர்கள் செய்யும் சிறிய தவறும் பெரிதாக தெரிகிறது’ என்றார். பாட்னா அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் கருத்து தெரிவிக்கையில், ‘எனக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார்.

    குஜராத் அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், ‘3-வது சீசனில் நான் கேப்டனாக இருந்து பாட்னா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தேன். தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக கோப்பையை வெல்வதில் ஆர்வமாக உள்ளேன். பர்தீப் நர்வாலின் பலம், பலவீனம் எனக்கு நன்கு தெரியும். அவரை கட்டுப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை 2 முறை வீழ்த்தி இருக்கிறோம்’ என்றார்.

    குஜராத் கேப்டன் பாசெல் அட்ராசாலி கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டில் பர்தீப் நர்வாலும், நானும் ஒரே அணியில் தான் விளையாடினோம். இதனால் அவரது ஆட்ட அணுகுமுறை எனக்கு தெரியும். அவரை எங்களால் சமாளிக்க முடியும். புரோ கபடி மூலம் ஈரானில் கபடி வெகுவாக பிரபலம் அடைந்து இருக்கிறது’ என்றார்.

    இந்த போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    Next Story
    ×