search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 4-0 என வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    வங்காள தேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் ‘சூப்பர் 4’ பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்காள தேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ‘சூப்பர் 4’ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு நுழைந்து விடலாம் என்பதால் வெற்றி பெற வேண்டிய நோக்கத்தில் இந்தியா களம் இறங்கியது. அதேவேளையில் இந்தியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கோணத்தில் பாகிஸ்தான் களம் இறங்கியது.

    தொடக்கம் முதலே இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கு பாகிஸ்தான் வீரர்களும் பதிலடி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 39-வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் ஹர்மன் ப்ரீத் ஒரு கோலும், லலித் உபத்யாய் ஒரு கோலும் அடிக்க இந்தியா 3-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது.

    ஆட்டம் முடிவதற்கு சுமார் 8 நிமிடத்திற்கு முன் குர்ஜந்த் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்தியா 4-0 என வெற்றி பெற்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    Next Story
    ×