search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கால்இறுதியில் கானா-மாலி, அமெரிக்கா-இங்கிலாந்து இன்று மோதல்
    X

    ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: கால்இறுதியில் கானா-மாலி, அமெரிக்கா-இங்கிலாந்து இன்று மோதல்

    ஜூனியர் உலக கோப்பை கால்பந்து கால் இறுதி ஆட்டங்களில் கானா-மாலி, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
    கவுகாத்தி:

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

    கவுகாத்தி நகரில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் முதலாவது கால்இறுதியில் ஆப்பிரிக்க அணிகளான கானாவும், மாலியும் மல்லுகட்டுகின்றன. 2 முறை சாம்பியனான கானா 2-வது சுற்றில் 2-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நைஜரை வீழ்த்தி இருந்தது. நெருக்கமான தடுப்பு ஆட்டமும், அதிவேகமான தாக்குதல் பாணியும் கானாவின் பலமாகும். 1995-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடுவதில் தீவிரமாக இருக்கும் கானா அணி, ஜூனியர் உலக கோப்பையில் மாலியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த மே மாதம் ஜூனியர் ஆப்பிரிக்க கோப்பை இறுதி ஆட்டத்தில் மாலியிடம் தோற்றிருந்த கானா அதற்கு பழிதீர்க்கும் வெறியுடன் உள்ளது.

    2-வது ரவுண்டில் ஈராக்கை 5-1 என்ற கணக்கில் வென்றதால் மாலி அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அந்த அணியின் லாசானா நிடியே இதுவரை 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். ஆனால் மாலியின் தடுப்பாட்ட வியூகம் பலவீனமாக உள்ளது. இதுவரை 5 கோல்கள் விட்டுக்கொடுத்துள்ள அந்த அணி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இரவு 8 மணிக்கு கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறும் மற்றொரு கால்இறுதியில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் கோதாவில் இறங்குகின்றன.

    இங்கிலாந்து ஜூனியர் உலக கோப்பையில் பங்கேற்று இருப்பது இது 4-வது முறையாகும். ஆனால் கால்இறுதியை தாண்டியதில்லை. லீக் சுற்றில் மட்டும் 11 கோல்கள் அடித்து மிரட்டியுள்ள இங்கிலாந்து முதல் முறையாக அரைஇறுதியை எட்டும் ஆவலில் உள்ளது.

    1999-ம் ஆண்டு உலக கோப்பையில் 5-வது இடத்தை பிடித்த அமெரிக்கா, அதன் பிறகு ஒரு போதும் கால்இறுதி தடையை உடைத்ததில்லை. அந்த அணியும் நீண்ட சோகத்தை முடிவு கட்டும் வேட்கையில் இருப்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    இங்கிலாந்து பயிற்சியாளர் ஸ்டீவ் ஹூபர் கூறுகையில், ‘எங்களது பலத்தையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலைக்கு வந்துள்ளோம். அமெரிக்காவும் நல்ல நிலையில் இருக்கிறது. அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்றார்.

    அமெரிக்க பயிற்சியாளர் ஜான் ஹாக்வொர்த் கூறுகையில், ‘வலுவான அணியுடன் மோதுகிறோம். எங்களது முழு திறமைக்கு ஏற்ப விளையாடினால் அவர்களை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேற முடியும்’ என்றார்.

    இரு ஆட்டங்களையும் சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 
    Next Story
    ×