search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துடன் 2-வது ஒருநாள் போட்டி: டி வில்லியர்ஸ் அதிரடியால் தென் ஆப்ரிக்கா வெற்றி
    X

    வங்காளதேசத்துடன் 2-வது ஒருநாள் போட்டி: டி வில்லியர்ஸ் அதிரடியால் தென் ஆப்ரிக்கா வெற்றி

    வங்காளதேசத்துடனான 2-வது ஒருநாள் போட்டியில், டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
    பார்ல்:

    வங்காளதேசத்துடனான 2-வது ஒருநாள் போட்டியில், டி வில்லியர்சின் அதிரடி ஆட்டத்தால் 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    வங்காளதேசம் அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் வங்காளதேசத்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி பார்ல் பகுதியில் உள்ள போலந்து பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.



    தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும் டி காக்கும் களமிறங்கினர். இந்த ஜோடி 90 ரன் எடுத்த நிலையில் டி காக் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த டுபிளசிஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    அதன்பின்னர் களமிறங்கிய டி வில்லியர்ஸ் தனது அதிரடியை ஆரம்பித்தார். வங்காளதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் விளாசினார். ஆம்லா-டி வில்லியர்ஸ் ஜோடி 136 ரன் சேர்த்த நிலையில் ஆம்லா ஆட்டமிழந்தார். ஆம்லா 92 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.

    ஆனாலும், டி வில்லியர்ஸ் தனது அதிரடியை தொடர்ந்தார். அணியின் எண்ணிக்கை 343 ரன்களை தொட்டபோது அவர் ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 104 பந்துகளில் 7 சிக்சர், 14  பவுண்டரிகள் அடித்து 176 ரன்களில் வெளியேறினார். இது இவரது 25-வது சதமாகும்.

    இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் அணி சார்பில் ரூபேல் உசேன் 4 விக்கெட்களும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 354 என்ற கடின இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் காயேஸ் மற்றும் முஷ்பிகுர் ரகுமான் ஆகியோரை தவிர மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் வங்காளதேச அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென் ஆப்ரிக்கா அணி சார்பில் அடிலே பெலுக்வாயோ 4 விக்கெட், இம்ரான் தாஹிர் 3 விக்கெட், பிரிடோரியஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
    Next Story
    ×