search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி: கடைசி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
    X

    புரோ கபடி: கடைசி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

    புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 40-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
    சென்னை:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். புனே சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெரும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இது தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி லீக் போட்டியாகும்.



    இப்போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-12 என்ற புள்ளிக்கணக்கில்  முன்னிலை வகித்தது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி கவனிப்புடன் விளையாடியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 40-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், பாட்னா அணி கேப்டன் பிரதீப் நர்வால் 20 தொடுபுள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் 14 தொடுபுள்ளிகளும் எடுத்தனர்.

    பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் - யூ மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 43-24 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 15 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

    இன்றைய லீக் பிரிவு ஆட்டங்கள் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் புனேரி பால்டன் அணி 68 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், யூ மும்பா அணி 56 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் நீடிக்கின்றன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 68 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

    நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×