search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி 2017: 5-வது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி
    X

    புரோ கபடி 2017: 5-வது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி தொடரின் லீக் சுற்று போட்டியில், யூ மும்பா அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யூ மும்பா அணி, தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 18-15 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இருப்பினும் முடிவில் 38-35 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகுர் அதிகபட்சமாக 15 தொடுபுள்ளிகள் எடுத்தார்.

    பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 35-34 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணியின் நிதின் ராவல் அதிகபட்சமாக 10 தொடுபுள்ளிகள் எடுத்தார்.



    இன்றைய ஆட்டங்களின் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் யூ மும்பா அணி 56 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 51 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 36 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 40 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

    இன்று (11-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டிகளில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×