search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபி டெஸ்ட்: 136 ரன் இலக்கை எட்ட முடியாமல் இலங்கையிடம் மோசமாக தோற்ற பாகிஸ்தான்
    X

    அபுதாபி டெஸ்ட்: 136 ரன் இலக்கை எட்ட முடியாமல் இலங்கையிடம் மோசமாக தோற்ற பாகிஸ்தான்

    அபுதாபில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 136 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
    அபுதாபி:

    அபுதாபில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 136 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

    பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்தது.

    முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 419 ரன்னும், பாகிஸ்தான் அணி 422 ரன்னும் எடுத்தன. 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இருந்தது. குசல் மென்டிஸ் 16 ரன்னுடனும், லக்மல் 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.



    நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 138 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக டிக்வெல்லா 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டும், முகமது அப்பாஸ் 2 விக்கெட்டும், ஹசன் அலி, ஆசாத் ஷபிக், ஹாரிஸ் சோகைல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இதைத்தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, தில்ருவன் பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோரின் மாயாஜால சுழலில் சிக்கி திணறி 47.4 ஓவர்களில் 114 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நேற்று ஒரேநாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அபுதாபியில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 34 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெராத் 6 விக்கெட்டும், தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகள் சாய்த்த ரங்கனா ஹெராத் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    84-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய 39 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹெராத் கடைசி விக்கெட்டான முகமது அப்பாசை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்திய 400-வது விக்கெட்டாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரங்கனா ஹெராத் பெற்றார்.

    அடுத்து இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. 
    Next Story
    ×