search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி சென்னை வந்தது
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி சென்னை வந்தது

    புரோ கபடி லீக் தொடரில், சென்னை சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழ் தலைவாஸ் அணி நேற்று சென்னை வந்தது.
    சென்னை:

    5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இந்த போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

    இதன் சென்னை சுற்று ஆட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 11 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி சொந்த ஊரில் 6 ஆட்டங்களில் ஆடுகிறது. இதையொட்டி அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணியினர் நேற்று பகல் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்கள் இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

    தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் 32 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் (பி) கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் 9 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. இதில் குறைந்தபட்சம் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளது.

    சென்னையில் நாளை நடக்கும் 100-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, வலுவான புனேரி பால்டனை (இரவு 8 மணி) சந்திக்கிறது.

    சென்னை சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. போட்டிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200, ரூ.450, ரூ.750, ரூ.2,500, ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் உள்ள 10-வது நுழைவு வாயிலில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதுதவிர ev-e-nts-n-ow.com என்ற இணைய தளம் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தகுந்த அங்கீகார கடிதத்துடன் டிக்கெட் வாங்கினால் கட்டணத்தில் 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் 41-34 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூரையும், உத்தரபிரதேச யோத்தா 45-16 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியையும் தோற்கடித்தது.
    Next Story
    ×