search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரும்: விராட்கோலி நம்பிக்கை
    X

    இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரும்: விராட்கோலி நம்பிக்கை

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று கேப்டன் விராட்கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இன்னும் 2 ஆட்டங்கள் மிஞ்சி இருக்கும் நிலையில் தொடரை கைப்பற்றியது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு அந்த அணி சரிவை சந்தித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 124 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்ட்யா 78 ரன்னும், ரோகித் சர்மா 71 ரன்னும், ரஹானே 70 ரன்னும் எடுத்தனர்.

    ஒருநாள் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி அணிகளின் தர வரிசையில் 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த வெற்றி திருப்தி அளிக்கிறது. தொடரை வென்றதற்கு எல்லா வீரர்களின் பங்களிப்பும் காரணமாகும். இந்த வெற்றிப் பயணம் கடைசி ஆட்டம் முடியும் வரை தொடரும். வரும் ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். களத்தில் இறங்கிய பிறகு எதிரணிக்கு கருணை காட்டக்கூடாது என்பது அணியின் அனைத்து வீரர்களுக்கும் தெரியும்.

    தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அணியின் பந்து வீச்சு வியூகம் நன்றாக இருந்தது. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் இறுதி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்களாக விளங்குகிறார்கள். முதல் 38 ஓவர்களில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். தொடக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தி இருந்தால் 330 முதல் 340 ரன்கள் வரை எடுத்து இருக்கலாம். ஆனால் கடைசி கட்டத்தில் எங்களது திட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை. இதனை சரிசெய்ய நாங்கள் வழி முறையை கண்டுபிடிக்க வேண்டும்.

    நல்ல நிலைக்கு வந்த பிறகு அதனை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளாமல் விட்டு விடுகிறோம். இந்த ஆட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த பிரச்சினை குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். ஆனாலும் நாங்கள் விரும்பிய முடிவை பெறுவதில் எங்கு தவறு செய்கிறோம் என்பது சரியாக புரியமுடியவில்லை. ஒருநாள் போட்டியாகட்டும், டெஸ்ட் போட்டியாகட்டும் இந்த நிலை தான் எங்கள் அணிக்கு நீடிக்கிறது. தொடர்ந்து தோல்வியை சந்தித்தால் அணியினரை ஊக்கப்படுத்துவது என்பது கடினமான காரியமாகும். வெளிநாட்டில் நடந்த கடந்த 15 போட்டிகளில் 13-ல் தோல்வியை சந்தித்துள்ளோம். 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இது மிகவும் மோசமானதாகும். இது ஆஸ்திரேலிய அணியின் புகழுக்கு நல்லதல்ல. முடிவுகளை மாற்றி சில போட்டிகளில் வென்று வெற்றியை ருசிக்கும் பழக்கத்துக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம்.

    ஆஷஸ் தொடர் டெஸ்ட் போட்டியாகும். அதோடு ஒருநாள் போட்டி தொடரை ஒப்பிட முடியாது. எந்த வடிவமான போட்டியாக இருந்தாலும் ஏதாவது போட்டியை வென்று வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறோம். மொத்தத்தில் இந்த நாள் எங்களுடைய நாளாக அமையவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி எனக்கு சிறப்பாக அமைந்தது. சிக்சர் அடிப்பது என்பது எனக்கு புதிதல்ல. இளம் வயது முதலே நான் சிக்சர்கள் விளாசி வருகிறேன். ஆட்டத்தின் போக்கை பார்த்து தான் எனது ஷாட் தேர்வு இருக்கும்.

    எந்த வரிசையில் இறங்கி விளையாடினாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 4-வது வீரராக விளையாட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். அதிக பந்துகளை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சை குறி வைத்து எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். என்னை பற்றிய எதிர்பார்ப்பை நினைக்காமல் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார். 
    Next Story
    ×