search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் போட்டியின் எதிர்காலம் குறித்து யோசிப்பதே இல்லை: ரகானே சொல்கிறார்
    X

    ஒருநாள் போட்டியின் எதிர்காலம் குறித்து யோசிப்பதே இல்லை: ரகானே சொல்கிறார்

    ஒருநாள் போட்டியில் மாற்று தொடக்க வீரராக இருந்து வரும் ரகானே, எதிர்காலம் குறித்து யோசிப்பதே இல்லை என்று கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரகானே. டெஸ்ட் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கி வரும் ரகானே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

    அவரை தொடக்க வீரராகத்தான் களம் இறக்குவேன் என்று முன்னாள் கேப்டன் டோனி கூறியிருந்தார். அதே நிலையில்தான் விராட் கோலியும் உள்ளார். இதனால் ரகானே தன்னை தொடக்க வீரருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொண்டார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தவான் இடம்பிடித்திருந்ததால் ரகானே ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினார். தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    ஆனால் இலங்கை தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் முதல் மூன்று போட்டியில் இருந்து தவான் விலகியதால் ரகானே தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.

    கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தவான் தேர்வானால், ரகானேவிற்கு இடம்கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்து யோசிப்பதே இல்லை என ரகானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘எதிர்காலம் குறித்து நான் நினைக்கவில்லை. எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது என் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இதுதான் விஷயம். நான் ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்த சிந்தனையோடுதான் இருக்கிறேன்.



    தவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. என்னை பொறுத்தவரையில் என்னுடைய முழுத்திறமையையும் அணிக்காக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயம்.

    அதனால் என்னுடைய ஆட்டத் திட்டத்தில் உறுதியாக இருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எந்தநேரமும் அணிக்காக சதம் அடிப்பது குறித்து நீங்கள் நினைக்க முடியாது. முக்கியமான கட்டத்தில் 45 முதல் 50 அல்லது 70 ரன்கள் அடித்தால், அதுவே பெரிய விஷயம். நான் எப்போதும் இதைத்தான் விரும்புவேன்’’ என்றார்.
    Next Story
    ×