search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அட்டவணை அறிவிப்பு: நவம்பர் 17-ந் தேதி தொடக்கம்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அட்டவணை அறிவிப்பு: நவம்பர் 17-ந் தேதி தொடக்கம்

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அட்டவணையை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.
    மும்பை:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அட்டவணையை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் பங்கேற்கும் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கோவா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), புனே சிட்டி எப்.சி. ஆகிய 8 அணிகளுடன் இந்த முறை புதிதாக பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

    நவம்பர் 17-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். கொல்கத்தாவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்சுடன் மோதுகிறது. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி.யை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 19-ந் தேதி சந்திக்கிறது.

    மொத்தம் 95 ஆட்டங்கள் நடைபெறுகிறது. புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினசரி ஒரு ஆட்டமும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரட்டை ஆட்டமும் இடம் பெறும். திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை ஓய்வு நாளாகும்.

    ஆட்டம் தொடங்கும் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டம் இனிமேல் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை 2 ஆட்டங்கள் என்பதால், ஒரு ஆட்டம் மாலை 5.30 மணிக்கும், மற்றொரு ஆட்டம் இரவு 8 மணிக்கும் ஆரம்பமாகும்.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம், தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×