search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னரை எந்த நேரத்திலும் அவுட் செய்ய முடியும்: இந்தியா சுழற்பந்து வீரர் குல்தீப்
    X

    வார்னரை எந்த நேரத்திலும் அவுட் செய்ய முடியும்: இந்தியா சுழற்பந்து வீரர் குல்தீப்

    ஆஸ்திரேலிய வீரர் வார்னரை எந்த நேரத்திலும் என்னால் அவுட் செய்ய இயலும் என்று இந்தியா சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வதுஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் தொடங்குகிறது.

    சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல இன்றைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது.

    அதே நேரத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் நோக்கில் இருக்கிறது.

    இந்தப்போட்டி குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது பந்து வீச்சை எதிர்கொள்வதில் வார்னர் நெருக்கடியாக இருப்பதாக கருதுகிறேன். அவரை நான் அவுட் செய்து விடுவேன் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அவருக்கு பந்துவீச நான் எப்போதும் ஆர்வத்துடன் தான் இருக்கிறேன். திட்டமிட்டு பந்து வீசி அவரை நான் மீண்டும் அவுட் செய்ய முயற்சிப்பேன்.

    வார்னர் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை ஒட்டு மொத்தமாக மாற்றக்கூடியவர். ஆனால் அவரை எந்த நேரத்திலும் என்னால் அவுட் செய்ய இயலும்.

    ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்துக்கு பந்துவீசுவது சவாலானது. டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த ஆட்டத்தை நான் பார்த்தேன். ஒரு ரன்னை எப்படி எடுப்பது, லெக்சைடில் எப்படி ஆடுவது என்பதை நன்கு அறிந்தவர்.

    யசுவேந்திர சஹாலுடன் இணைந்து பந்து வீசுவது நல்ல அனுபவம். ஒரு அணியில் மணிக்கட்டை சுழற்றி வீசும் இரண்டு சுழற்பந்து வீரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும்.

    நாங்கள் இருவருமே ஆக்ரோ‌ஷமாக வீசக் கூடியவர்கள். விக்கெட்டுகளை வீழ்த்த எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் இருவர் மீதும் அதிகமான பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    22 வயதான சைனாமேன் பவுலரான குல்தீப் யாதவ் டெஸ்டில் வார்னரை வீழ்த்தியதே முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

    இதேபோல சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியிலும் அவர் வார்னரை அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×