search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்
    X

    ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதுகு வலி பிரச்சினை காரணமாக அவரால் நீண்ட காலம் ஆஸ்திரேலிய அணியில் நீடிக்க முடியவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    கிளார்க்கிற்குப் பிறகு ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது.

    தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 2-வது போட்டி கொல்கத்தாவில் 21-ந்தேதி நடக்கிறது. இந்நிலையில் ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.



    இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘ஸ்மித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. ஆனால், அவருடைய கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது. அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லுவது தேவையானது.



    ஆஸ்திரேலியா அணி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×