search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க கேப்டன் விராட்கோலி காரணம்: யுஸ்வேந்திர சாஹல்
    X

    தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க கேப்டன் விராட்கோலி காரணம்: யுஸ்வேந்திர சாஹல்

    தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க கேப்டன் விராட்கோலியின் தாக்கம் காரணம் என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தாக்குதல் ஆட்டத்தை தான் தொடுப்பார்கள். அதிலும் அணியின் கேப்டன் ஆக்ரோஷமாக செயல்படுபவராக இருந்தால் சுதந்திரமாக அதிக தாக்குதல் ஆட்டத்தை பின்பற்றுவார்கள். கேப்டன் விராட்கோலி ஆக்ரோஷ ஆட்ட பாணியை கடைப் பிடிப்பதால் எங்களால் அதிக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.

    நானும், குல்தீப் யாதவும் தாக்குதல் ஆட்ட பாணியை கடைப்பிடிப்பவர்கள். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்த படி எங்களது தாக்குதல் ஆட்ட முறை இருக்கும். குல்தீப் முதலில் பந்து வீசினால் பந்து எப்படி சுழலுகிறது, நாம் எப்படி விக்கெட்டை கைப்பற்றலாம் என்பது குறித்து அவருடன் விவாதிப்பேன். ஏனெனில் நாங்கள் இருவருமே விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படக்கூடியவர்கள். ரன் விட்டுக்கொடுக்காமல் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கமாட்டோம். அப்படி பாதுகாப்பாக விளையாடினால் வெற்றி பெற முடியாது.

    ஐ.பி.எல். போட்டியில் மேக்ஸ்வெல்க்கு எதிராக நான் பலமுறை பந்து வீசி இருக்கிறேன். ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசும் பந்தை அவர் அடித்து ஆடினால் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். மேக்ஸ்வெல் எப்படி காலை நகர்த்துகிறார் என்பதை பார்த்து அதற்கு தக்க ஆப்-ஸ்டம்புக்கு வெளியே பந்து வீசும் படி கேப்டன் விராட்கோலி, டோனி ஆகியோர் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இல்லாத நிலையிலும் ஹர்திக் பாண்டியா, டோனி ஆகியோர் ஆடிய விதம் அபாரமானது. இந்த ஆடுகளத்தில் 230 முதல் 240 ரன்கள் எடுத்தாலே போதுமானது. 87 ரன்னுக்கு நாம் 5 விக்கெட்டுகளை இழந்து இருக்கையில் ஆட்டம் 70 சதவீதம் ஆஸ்திரேலிய அணியின் கையில் தான் இருந்தது. ஆடம் ஜம்பா ஓவரில் நமது வீரர்கள் ஆடிய விதத்தில் உத்வேகம் பிறந்ததுடன், ஸ்கோரும் 280 ரன்னை தாண்ட வழிவகுத்தது. நமது பந்து வீச்சாளர்களும் அருமையாக பந்து வீசி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சாய்த்தனர்.

    இவ்வாறு யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்தார்.
    Next Story
    ×