search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி

    சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
    சென்னை:

    இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

    இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது.



    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா 83 ரன்களும், முன்னாள் கேப்டன் டோனி 79 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு 282 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இருப்பினும் மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. மழை நின்றபின்னர் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஹில்டன் கார்ட்ரைட்டும் களமிறங்கினர். தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஹில்டன் 1 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 1 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    அடுத்து டேவிட் வார்னருடன், கிலென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். டேவிட் வார்னர், 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கியவர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் நிலைத்துநின்று ஆடிய ஜேம்ஸ் பாக்னர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 21 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்களும் விழ்த்தினர். இதன்மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 83 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வீழ்த்திய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி வருகிற 21ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×