search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    முதல் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 282 ரன்களை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.
    சென்னை:

    இந்திய அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.

    இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தவான் விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ரகானே களமிறங்கினார்.

    ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஆஸ்திரேலிய பவுலர் நாதன் கோல்டர், ரகானேவை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். அப்போது இந்தியா 11 ரன்னுக்கு ஒரு விக்கெட் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை டக் அவுட் ஆக்கி வெளியேற்றி சென்னை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நாதன் கோல்டர். 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது.



    அதன்பின் களமிறங்கிய கேதார் ஜாதவ் ஓரளவு தாக்குப்பிடித்தார். ரோகித்சர்மா - கேதார் ஜாதவ் ஜோடி அரை சதம் கடந்தது. ரோகித் சர்மா 28 ரன்களில் சோனிஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது இந்தியா 64 ரன்னுக்கு 4 விக்கெட் எடுத்திருந்தது.

    அவரை தொடர்ந்து விக்கெட் கீப்பர் தோனி களமிறங்கினார். மறுமுனையில் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய கேதார் ஜாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 5 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது.

    ஜாதவை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். முதலில் தோனியுடன் சேர்ந்து ஒன்றும் இரண்டுமாக எடுத்தனர். சில ஓவர்கள் நின்று விளையாடிய பாண்டியா தனது அதிரடியை ஆரம்பித்தார். சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்திருந்தபோது பாண்டியா அவுட்டானார். 66 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என விளாசிய அவர் 83 ரன்கள் எடுத்து அசத்திய அவர், சம்பாவின் சுழலில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதையடுத்து புவனேஷ்குமார் இறங்கினார். தோனியும் அவரும் சிறப்பாக விளையாடினர். மறுமுனையில் தோனி தனது 66-வது அரை சதமடித்து அசத்தினார். தோனி 88 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரி அடித்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. புவனேஷ்குமார் 32 ரன்னும், குல்தீப் யாதவ் ரன் எடுக்காமலும் இருந்தனர்.

    ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் கோல்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், சம்பா, பக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியா 282 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
    Next Story
    ×