search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சாதனையை நினைத்து விளையாடுவது கிடையாது’: விராட் கோலி பேட்டி
    X

    ‘சாதனையை நினைத்து விளையாடுவது கிடையாது’: விராட் கோலி பேட்டி

    சாதனையை நினைத்து நான் விளையாடுவது கிடையாது என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    லோகேஷ் ராகுல் அபாரமான திறமை கொண்டவர். எல்லா வடிவிலான ஆட்டத்திலும் அவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அவருடையை திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தனது வழக்கமான பாணி ஆட்டத்தை தொடங்கி விட்டால் அவரால் அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும், அணிக்கு தேவையான வரிசையில் இறங்கி விளையாட எல்லா வீரர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    பேட்டிங் வரிசையில் மாற்றி இறங்கி விளையாடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு சற்று காலம் பிடிக்க தான் செய்யும். ரஹானே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அதேபோல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும் நன்றாக விளையாடி இருக்கிறார். அவருக்கு வரிசை மாறி விளையாடுவதில் கடினம் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது ரஹானே தொடக்க வீரராக விளையாட நாங்கள் பக்கபலமாக இருப்போம்.

    முழங்கையை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசக்கூடிய குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்து இருப்பது நமக்கு நல்ல பலமாகும். இருவரும் வெவ்வேறு விதமாக செயல்படக்கூடியவர்கள். மிடில் ஓவர்களில் இருவரும் விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர்கள். இருவரும் இந்த போட்டி தொடரில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வலுசேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வித்தியாசமாக அணுக வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எதிரணியை விட நாம் சிறப்பாக தயாராக வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். அத்துடன் எதிரணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி செயல்பட வேண்டும். எதிரணியை பார்த்து ஆட்ட தீவிரத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடாது.

    எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம். முந்தைய போட்டி தொடர்களை போல் இந்த போட்டி தொடரிலும் நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடன் விளையாடுவோம். நாங்கள் விளையாடும் எல்லா ஆட்டங்களிலும் விறுவிறுப்பான போட்டி இருக்க வேண்டியது முக்கியம் என்று நான் கருதுகிறேன். எல்லா அணியிலும் ஆல்-ரவுண்டர்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். முழுமையான ஆல்-ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் இலங்கை தொடரில் நமக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர். மேலும் ஆல்-ரவுண்டர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்படும்.

    சதம் அடிக்க வேண்டும், சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்து நான் விளையாடுவது கிடையாது. சாதனைகளை நினைத்து எனக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. மற்ற வீரர்களுடன் இணைந்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

    இவ்வாறு விராட்கோலி கூறினார்.
    Next Story
    ×