search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4, 17, 7 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவு
    X

    4, 17, 7 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவு

    இலங்கை தொடரில் 4, 17 மற்றும் 7 ரன்கள் அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவாக உள்ளார்.
    இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான தரமான இந்திய அணியை உருவாக்குவதில் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கு முன்னோட்டமாக லோகேஷ் ராகுல் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரை 4-வது மற்றும் ஐந்தாவது இடத்தில் களம் இறக்கி பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

    இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் லோகேஷ் ராகுல் களம் இறக்கப்பட்டார். மூன்று போட்டியிலும் சொதப்பினார். 4, 17 மற்றும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடைசி போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

    தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படி இன்று விராட் கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லோகேஷ் ராகுலுக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார்.



    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘லோகேஷ் ராகுல் மிகவும் தலைசிறந்த திறமையான வீரர். அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர் என்பதை நிரூபித்து உள்ளார். இவரைப் போன்று ஒருவர் நமக்குத் தேவை. ஏனென்றால், அவரிடம் திறமை இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். ஒருமுறை அவரது வேலையை சரியாக செய்துவிட்டால், எங்களுடைய போட்டிகளை வெற்றி பெறுவதற்கான வேலையை துவங்கி விடுவார். நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம்.

    ஒரு போட்டியில் களம் இறங்கும் இடத்தில்தான் மற்ற போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என்று நீங்கள் பார்த்தால், சரியான பேலன்ஸ் கொண்ட அணியை உருவாக்குவதில் கஷ்டம் ஏற்பட்டுவிடும். அணிக்கு என்ன தேவை, அணி நிர்வாகம் எந்த இடத்தில் களம் இறக்க விரும்பினாலும், வீரர்கள் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.



    உதாரணமாக, நான் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளேன். அதை செய்யும் அளவிற்கு என்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வீரர் தன்னை பலதரப்பட்ட வகையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் அணி அவரிடம் சொல்லும் வேலையை சரியாக செய்ய முடியும்’’ என்றார்.
    Next Story
    ×