search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ் அரிய திறமை உடையவர்: ஆஸி. கேப்டன் சொல்கிறார்
    X

    குல்தீப் யாதவ் அரிய திறமை உடையவர்: ஆஸி. கேப்டன் சொல்கிறார்

    குல்தீப் யாதவ் அரிய திறமை உடையவர். அவரது பந்து வீச்சை சமாளிக்க உள்ளூர் பந்து வீச்சாளரை வைத்து பயிற்சி எடுத்தோம் என ஸ்மித் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் பலம் வாய்ந்தது என்பதால் போட்டி முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது, பேட்ஸ்மேன்களை எப்படி கட்டுப்படுத்துவது? போன்ற விஷயங்களில் இரு அணிகளும் கவனம் செலுத்துகின்றன.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் இருந்தது.

    தரம்சாலாவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் ‘சைனமேன்’ என அழைக்கப்படும் விரிஸ்ட் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அறிமுகமானர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அதிக ரன்கள் குவிக்கும் நிலையில் இருந்தது. அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துகள் அடிபட்டன. வெற்றியை தீர்மானிக்கும் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்தார் குல்தீப் யாதவ்.

    அதன்பின் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக வளர்ந்து வருகிறார். அஸ்வின், ஜடேஜாவிற்குப் பிறகு முதன்மையான பவுலராக கருதப்படுகிறார்.

    இந்தியாவிற்கு எதிரான தொடரில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருப்பார் என ஆஸ்திரேலியா கருதியது. இதனால் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இருக்கும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் மூலம் டெல்லியை சேர்ந்த விரிஸ்ட் பந்து வீச்சாளர் ஜியாஸ் என்பரை பயிற்சியின்போது பயன்படுத்திக் கொண்டது.

    வலைப்பயிற்சியின் போது இவரது பந்து வீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். விரிஸ்ட் பந்து வீச்சில் பயிற்சி எடுப்பதால் குல்தீப் யாதவ் பந்து வீச்சை திறமையாக எதிர்கொள்ளலாம் என நினைக்கிறது.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் அரிதான திறமை உடையவர் என ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஸ்டீவன் ஸ்மித் கூறுகையில் ‘‘குல்தீப் யாதவின் இடது கை விரிஸ்ட் மாயாஜால பந்து வீச்சு முறை அரிதான திறமை. உலகளவில் இடது கை திறமையாளர்கள் அரிதானவர்கள். அவர்கள் மாறுபட்டவர்கள். ஆகவே, இடது கை பந்து வீச்சாளர்களில் ஏதாவது ஒருவருக்கு மிகவும் சிறப்பாக அமைகிறது.

    குல்தீப் யாதவ் மிகச்சிறந்த இளம் வயது திறமையாளர். தற்போதைய சூழ்நிலையில் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வது சற்று கடினம். அவரது பந்து வீச்சை மிகவும் துல்லியமாக ஆராய வேண்டும். பந்து வீச்சுக்கு அழைக்கப்படும்போதே அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அதன்பிறகு ரன்கள் குவிக்க முயற்சி செய்வோம்.

    இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சுழற்பந்து முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்த தொடரிலும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இருக்கும். கடந்த முறை இந்திய மண்ணில் விளையாடும்போது ஒவ்வொரு போட்டியிலும் ஸ்கோர் 350 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அதே ஆடுகளம் தற்போது வழங்கப்பட்டால், முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் ஒருவர் அதிக ரன்கள் குவிப்பது அவசியம்’’ என்றார்.
    Next Story
    ×