search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் தலைவாஸ் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? உ.பி. யோதாவுடன் இன்று மோதல்
    X

    தமிழ் தலைவாஸ் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? உ.பி. யோதாவுடன் இன்று மோதல்

    தமிழ் தலைவாஸ் தனது 10-வது ‘லீக்’ ஆட்டத்தில் உ.பி. யோதாவை இன்று சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
    சோனிபட்:

    5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்தது.

    7-வது கட்டமாக அரியானா மாநிலம் சோனிபட்டில் தற்போது இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பங்கேற்று உள்ளது. அந்த அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் பாட்னா ‘பைரேட்ஸ்’ பெங்கால் வாரியர்ஸ், உ.பி.யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணி தனது பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா 3 முறையும், ‘ஏ’ பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 1 தடவையும் ‘லீக்’ ஆட்டத்தில் மோத வேண்டும். இந்த பிரிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழைய முடியும்.

    தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 ஆட்டத்தில் 1 வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 16 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

    தமிழ் தலைவாஸ் தனது 10-வது ‘லீக்’ ஆட்டத்தில் உ.பி. யோதாவை இன்று (புதன்கிழமை) சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு அணியை மட்டுமே வென்று இருந்தது. தெலுங்கு டைட்டன்சிடம் 2 முறையும், பெங்களூரு, பெங்கால், பாட்னா, டெல்லி அணிகளிடம் தலா 1 முறையும் தோற்று உள்ளது. அரியானா, உ.பி. அணிகளுடன் ‘டை’ செய்து இருந்தது.

    தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்ற தமிழ் தலைவாஸ் அணி இன்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் ‘பிளேஆப்’ வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

    அந்த அணியுடன் ஏற்கனவே 33-33 என்ற கணக்கில் ‘டை’ செய்து இருந்ததால் வீழ்த்த இயலும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. அஜய் தாக்கூர், பிரபஞ்சனின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.

    உ.பி. யோதா அணி 13 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடன் 36 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனே பல்தான் (‘ஏ’ பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    அரியானா 7 வெற்றியுடன் 46 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், புனே அணி 6 வெற்றியுடன் 32 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன.

    நேற்று நடந்த ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் 32-31 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், அரியானா 27-24 என்ற கணக்கில் டெல்லியையும் வீழ்த்தின.
    Next Story
    ×