search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி: உலக லெவன் அணி இன்று களம் இறங்குகிறது
    X

    பாகிஸ்தானில், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி: உலக லெவன் அணி இன்று களம் இறங்குகிறது

    பாகிஸ்தான்- உலக லெவன் அணிகள் மோதும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பலத்த பாதுகாப்புடன் லாகூரில் இன்று நடக்கிறது.
    லாகூர்:

    பாகிஸ்தானின் லாகூர் நகரில், 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக வீரர்கள் காயத்துடன் தப்பி பிழைத்தனர். அதன் பிறகு பாதுகாப்பு பிரச்சினை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தொடர்ந்து மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகள் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. அந்த பயங்கர சம்பவத்திற்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அணிகளை எடுத்துக்கொண்டால் ஜிம்பாப்வே மட்டும் 2015-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுக்கு சென்று ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது.

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய பிறகு சொந்த மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கொடுத்த ஒத்துழைப்பின் பலனாக உலக லெவன் அணி உருவாக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறது.

    உலக லெவன் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திர தின கோப்பைக்காக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் செப்.12 (இன்று), செப்.13, செப்.15 ஆகிய தேதிகளில் லாகூரில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால் இது சர்வதேச போட்டிகளின் சாதனை பட்டியலில் இணையும்.

    தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் அணி நேற்று அதிகாலை லாகூர் சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத பஸ்சில் வீரர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையொட்டி வரும் வழியில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. 6 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி போட்டிக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உலக லெவன்-பாகிஸ்தான் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார். உலக லெவன் அணியில் இந்தியர்களை தவிர மற்ற நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். உலக லெவன் அணியில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஊதியமாக ரூ.64 லட்சத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்க உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. டிஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

    உலக லெவன்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல் (5 பேரும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்), ஜார்ஜ் பெய்லி, டிம் பெய்ன், பென் கட்டிங் (ஆஸ்திரேலியா), தமிம் இக்பால் (வங்காளதேசம்), திசரா பெரேரா (இலங்கை), கிரான்ட் எலியாட் (நியூசிலாந்து), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), டேரன் சேமி, சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்).

    பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹார் ஜமான், அகமது ஷேசாத், பாபர் அசாம், சோயிப் மாலிக், உமர் அமின், இமாத் வாசிம், ஷதப் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஆமிர் யாமின், ருமான் ரயீஸ், உஸ்மான் கான், சோகைல் கான்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய நாள். இது மட்டும் நடக்காவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக காத்திருக்க வேண்டி இருந்திருக்குமோ என்பது தெரியாது. ரசிகர்கள் சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்க்க ஏக்கத்துடன் உள்ளனர். அதற்கான புதிய தொடக்கம் தான் இது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் இங்கு வந்து விளையாட ஒப்புக்கொண்டுள்ளன’ என்றார்.
    Next Story
    ×