search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரோலினா பிளிஸ்கோவா, ரோஜர் பெடரர்
    X
    கரோலினா பிளிஸ்கோவா, ரோஜர் பெடரர்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், பிளிஸ்கோவா போராடி வெற்றி

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், பிளிஸ்கோவா 2-வது சுற்றில் போராடி வெற்றி பெற்றனர்.
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில், 4-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 3-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரஷியாவின் மிகைல் யூஸ்னியை எதிர்கொண்டார். 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெடரர் 6-1, 6-7 (3), 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் மிகைல் யூஸ்னியை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். ஏற்கனவே முதல் செட்டில் அமெரிக்காவின் பிரான்செஸ் டியாபோவையும் வெற்றி காண பெடரர் 5 செட் வரை போராட வேண்டி இருந்தது.

    36 வயதான பெடரர் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் முதல் இரு சுற்றை 5 செட்டுகளுடன் தொடங்குவது இதுவே முதல் முறையாகும். ‘முதல் ரவுண்டை விட இதில் நன்றாகவே செயல்பட்டேன். அதனால் மகிழ்ச்சியே’ என்று பெடரர் குறிப்பிட்டார்.

    மிகைல் யூஸ்னிக்கு எதிராக பெடரர் ஒரு போதும் தோற்றதில்லை. 17 முறை அவரை வீழ்த்தி இருக்கிறார். அந்த பெருமையை தக்க வைத்துக்கொண்ட 5 முறை சாம்பியனான பெடரருக்கு அமெரிக்க ஓபனில் இது 80-வது வெற்றியாக அமைந்தது. 3-வது சுற்றில் அவர் பெலிசியானோ லோப்சை (ஸ்பெயின்) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் 4-6, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் டாரோ டேனியலை (ஜப்பான்) விரட்டியடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். நடால் கூறுகையில், ‘ஒவ்வொருவரும் இங்கு தங்களது முழு திறமையை வெளிப்படுத்த விரும்புவதால் அனைத்து ஆட்டங்களும் கடினமாகத்தான் இருக்கும். இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக ஆடவில்லை என்பது உண்மை. அதே நேரத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டதும் உண்மை. ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். அதே சமயம் முன்னணி வீரர்கள் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) 2-வது சுற்றுடன் நடையை கட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அமெரிக்காவின் தகுதி நிலை வீராங்கனை நிகோல் கிப்சுடன் மோதினார். முதல் செட்டை பறிகொடுத்த பிளிஸ்கோவா எப்படியோ சரிவில் இருந்து மீண்டு 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டினார்.

    2004-ம் ஆண்டு சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான குஸ்னெட்சோவா (ரஷியா) 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் குருமி நராவிடம் அதிர்ச்சிகரமாக மண்ணை கவ்வினார். குருமி, தரவரிசையில் 116-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தோல்வியை அடுத்து ‘நம்பர் ஒன்’ வாய்ப்பும் குஸ்னெட்சோவாவுக்கு நழுவிப்போனது.



    ஷெல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா)- டாரியா காவ்ரிலோவா (ஆஸ்திரேலியா) இடையிலான ஆட்டம் வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. 3 மணி 33 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜர்ஸ் 7-6 (8-6), 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்தார். அமெரிக்க ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக நேரம் நடந்த ஆட்டம் இது தான்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து)- கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) இடையிலான மோதல் 3 மணி 23 நிமிடங்கள் நடந்ததே முந்தைய நீண்ட நேர ஆட்டமாகும்.

    எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஆஸ்டாபென்கோ (லாத்வியா), அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா), கையா கனேபி (எஸ்தோனியா), லூசி சபரோவா (செக்குடியரசு), எலினா வெஸ்னினா (ரஷியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) உள்ளிட்ட நட்சத்திரங்கள் 3-வது சுற்றை உறுதி செய்தனர்.
    Next Story
    ×